Friday, December 18, 2009

Internet - Some known and unknown terms


இணையம் - தெரிந்ததும் தெரியாததும்


உலகின் மிகப் பெரிய கணிணி வலையமைப்பாக இணையம் விளங்குகிறது. உலகிலுள்ள 170 ற்கு மேற்பட்ட நாடுகளில் வியாபித்துள்ள ஏராளமான அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் சர்ந்த கணினி வலையமைப்புகள் இணையத்தில் இணைந்துள்ளன. ஓரிடத்திலிருந்து உலகின் மற்றுமொரு இடத்திற்கு கணினியூடாக பைல் பரிமாற்றம் மற்றும் தொடர்பாடலை மேற் கொள்ளக் கூடிய ஒரு பாதையாகவே இணையம் செயற்படுகிறது. கண்டத்திற்குக் கண்டம் நாட்டுக்கு நாடு வியாபித்திருக்கும் இந்தக் கணினி வலையமைப்பு அதி வேகம் கொண்ட கேபல் கொண்டிணைக்கப்பட்டுள்ளன. இதனை Internet Backbone எனப்படுகிறது.

பல்வேறு வகையான பல்வேறு அளவுகளைக் கொண்ட பல்வேறு இயங்கு தளங்களைக் கொண்ட ஆயிரக் கணக்கான கணினிகள் இணையத்தில் நிரந்தரமாக இணைந்துள்ளன. இவற்றை சேர்வர் கணினிகள் எனப்படும்.

பல்வேறு வகையான கணினிகள் இணையத்தில் இணைந்துள்ள போதும் அவற்றிற்கிடையே TCP/IP (Transmission Control Protocol /Internet Protocol) எனும் பொதுவான ஒரு விதிமுறை பின்பற்றப்படுவதன் காரணமாக நாம் எந்த ஒரு கணினியிருந்தும் மற்றுமொரு கணினியுடன் இலகுவாகத் தொடர்பாட முடிகிறது. .

இராணுவ தேவைக்காக அமெரிக்காவினால் 1969 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட ஒரு கணினி வலையமைப்பே பின்நாளில் இண்டர்நெட்டாக உருவெடுத்தது. ஆரம்பத்தில் இந்தக் கணினி வலையமைப்பு ARPANET என அழைக்கப்படது.

தற்போது இணையத்தின் உரிமையாளராக எந்த ஒரு நாடோ நிறுவனமோ இல்லை எனினும் இணையத்தின் வளர்ச்சிக்காகவும் இணையத்தில் விதி முறைகளை நிர்ணயிக்கவும் முறைப்படுத்தவுமென சில தன்னார்வநிறுவனங்கள் ஈடு பட்டு வருகின்றன.

இணையத்தின் மூலம் கிடைக்கும் சில பொதுவான பயன்பாடுகளாக எந்த வொரு விடயம் பற்றிய தகவல்களைப் பெற்றுக் கொள்ளுதல், மின்னஞ்சல் சேவை, நிகழ் நேரத்தில் ஒருவரோடொருவர் உரையாடுதல், பைல்களையும் மென்பொருள்களையும் பரிமாறிக் கொள்ளல், இசை, திரைப்படம், விளையாட்டு என பொழுது போக்கு அம்சங்களில் ஈடு படல் பொருட்கள் மற்றும் சேவைகளைப பெறுதல் விற்பனை செய்தல் மூலம் இணைய வணிகத்திலீடுபடல் போன்ற பல வற்றைக் குறிப்பிடலாம்.

இணையம் சார்ந்த சில கலைச் சொற்ளையும் அவற்றிற்கான விளக்கத் தையும் பார்ப்போம்.

Asymmetric Digital Subscriber Line (ADSL) :
அதி வேக இணைய வசதியை வழங்கும் ஒரு இணைய இணைப்பு முறை. இதனையே Broadband எனவும் அழைக்கப்படுகிறது.

Blog :
web Log என்பதன் சுருக்கமே ப்லோக். இதனை ஓன்லைன் ஜேர்னல் (online Journal) எனப்படுகிறது. இது இணைய தளம் போன்ற்தே. இணைய தள வடிவாக்கம் பற்றி அறியாதவர்கள் கூட இதனை இலகுவாக உருவாக்கலாம். இந்த சேவையை blogspot.com, wordpress.com என்பன இலவசமாக வழங்குகின்றன. தமிழில் வலைப்பதிவு எனப்படுகிறது.

Browser இணைய சேவைகளில் ஒன்றான உலகலாவிய வலைத் தளமமான WWW ஐ அணுகுவதற்குப் பயன்படும் மென்பொருளையே பிரவுஸர் (இணைய உலாவி) எனப்படுகிறது. உதாரணம்: இண்டர்நெட் எக்ஸ்ப்லோரர், மொஸில்லா பயபொக்ஸ், கூகில் க்ரோம்

Download : இணையத்தில் அல்லது ஒரு வலையமைப்பில் இணைந்துள்ள ஒரு கணினியிலிருந்து எமது கணினிக்கு பைல் ஒன்றைப் பெற்றுக் கொள்வதை டவுன்லோட் எனப்படும்.

Domain Name இணையத்தில், இணைந்துள்ள கணினிகளை அல்லது இணணய தளங்களை இலகுவாக நினைவில் வைத்துக் கொள்ளும் வண்ணம் ஐபி முகவரி எனும் இலக்கங்களுக்குப் பதிலாக சொற்களைப் பயன் படுத்தும் முறையை டொமேன்  நேம் எனப்படுகிறது.

Dial-up: இணையத்தில் இணைவதற்குப் பலரும் நாடும் ஒரு பொதுவான இணைப்பு முறை. இணைய சேவை வழங்கும் நிறுவன கணினியை ஒரு மோடமைப் பாவித்து தொலைபேசிக் கம்பியூடாக இணைப்பக்கப்ப்டும். அதிக பட்சமாக 128 kbps அளவிலான வேகத்தையே கொண்டிருக்கும்.

E-mail (Electronic mail) :
கணினி வலையமைப்பில் அல்லது இணையத்தில் செய்திகளைப் பரிமாறிக் கொள்ளும் ஒரு பிரபலமான இணைய சேவையே மின்னஞ்சல் ஆகும். மின்னஞ்சல் அனுப்பவும் பெறவும் ஒரு மின்னஞ்சல் முகவரி அவசியம். ஒரு மின்னஞ்சல் முகவரி rila@gmail.com எனும் வடிவில் இருக்கும். இங்கு பயனர் பெயரும் டொமேன் பெயரும் @ எனும் குறியீட்டால் பிரிக்கப்படும்.

 Extranet : ஒரு நிறுவனம் சார்ந்த கணினி வலையமைப்பு. இது இணையத்தோடு தொடர்புபட்டிருக்கும். அந்நிறுவனத்தில் கடமையாற்றும் ஊழியர்கள் மட்டுமன்றி பொது மக்களும் உரிய பயனர் பெயர் மற்றும் கடவுச் சொல்லோடு இதனை அணுக முடியும்.

FTP : (File Transfer Protocol)
இணையம் வழியே பெரிய அளவிலான பைல்களையும் மென்பொருள்களையும் பரிமாறிக் கொள்ளும் சேவையை FTP எனப்படுகிறது.

File attachment
மின்னஞ்சலுடன் இணைத்து அனுப்பப்படும் சிறிய ஆவணங்கள் மற்றும் படங்களை எட்டேச்மண்ட் எனப்படுகிறது.

Firewall
இணையத்தைப் பயன்படுத்தி எமது கணினிக்குள் அனுமதியின்றி எவரும் ஊடுறுவாமல் தடுக்கும் மென்பொருளை பயவோல் எனப்படுகிறது.

Hyperlink :
இணைய தள மொன்றில் ஒரு பக்கத்திலிருந்து மற்றுமொரு பக்கத்திற்கு அல்லது வேறொரு இணைய தளத்திற்கு வழங்கப்படும் இணைப்பை ஹைபலின்க் எனப்படுகிறது.

HTTP (Hypertext Transfer Protocol) உலகலாவிய வலைத் தளத்தில் HTML ஆவணங்களை அனுப்பவும் பெறவும் பயன்படுத்தப்படும் ஒரு பொதுவான விதி முறையாகும்.

HTML (Hypertext Markup Language) வலைத்தளங்களை உருவாக்கப் பயன்படும் ஒரு கணினி மொழி.

Home Page ஒரு இணைய தளத்தின் முதல் பக்கத்தை அல்லது இணைய உலாவியைத் (வெப் பிரவுஸர்) திறக்கும் போது வரும் முதல் பக்கத்தை ஹோம் பேஜ் எனப்படுகிறது,.

Hacker
ஒரு கணினி வலையமைப்பில் அல்லது இணையத்தில் இணைந்துள்ள ஒரு கணினியின் பாதுகாப்பு ஓட்டைகளை நன்கறிந்து அக்கணினியினுள் அனுமதியின்றி நுளையும் ஒரு கை தேர்ந்த நபர் ஹெக்கர் (குறும்பர்). எனப்படுகிறார். பாதுகாப்புத் தன்மையைப் பரீட்சிப்பதற்காகவும் ஹெக்கர்களின் உதவியை நாடுவதுண்டு.

Instant Message (IM):
இணையததைப் பயன் படுத்தி நிகழ் நேரத்தில் இருவருக்கிடையில் நிகழ்தப்படும் உரையாடலை உடனடி செய்திச் சேவை எனப்படுகிறது. உதாரணம் : யாஹூ மெஸ்ஸென்ஜர், ஸ்கைப்
Internet Service Provider (ISP):இணைய சேவை வழங்கும் நிறுவனத்தையே ISP எனப்படுகிறது. நமது கணினியை இணையத்துடன் இணைக்கும்போது இந்த நிறுவனத்தின் கணினியூடாகவே நம் இணையத்தில் இணைகிறோம்.

IP (Internet Protocol) address
இணையத்தில் அல்லது ஒரு வலையமைப்பில் இணைந்துள்ள ஒவ்வொரு கணினியையும் வேறு படுத்திக் காட்டும், ஒரு இலக்கமே ஐபி முகவரி எனப்படுகிறது. இது நான்கு பகுதிகளைக் கொண்டிருக்கும். (உதாரனம்: 169.254.222.1). ஒவ்வொரு பகுதியும் 0 முதல் 255 வரையிலான இலக்கங்களைக் கொண்டிருகும்.

ISDN (Integrated Services Digital Network)
 டயல் அப், ப்ரோட்பேண்ட் போன்று ஒரு வகை இணைய இணைப்பாகும். இது டயல் அப்பை விட வேகமானது. ப்ரோட்பாண்டை விட வேகம் குறைந்தது. இது ஒரு டிஜிட்டல் சேவை என்பதால் மோடெம் அவசியமில்லை.

Intranet
ஒரு நிறுவனம் சார்ந்த கணினி வலையமைப்பு. நிறுவனத்தில் கடமையாற்றும் ஊழியர்களால் மட்டுமே இதனை அணுக முடியும். இது இணயத்தோடு தொடர்பு பட்டுமிருக்கலாம். தொடர்பு படாமலும் இருக்கலாம். எனினும் பொது மக்க்ள் யாரும் இந்த இந்த வலையமைப்பை அணுக முடியாது,

Modem:
என்லொக் வடிவில் டேட்டாவை ஒரு கணினியிலிருந்து மற்றுமொரு கணினிக்கு தொலைபேசிக் கம்பியூடாக அனுப்புவதற்கு மோடெம் எனும் சாதனம் பயன் படுத்தப்படுகிறது, இது டிஜிட்டல் வடிவிலுள்ள் டேட்டாவை (analogue) எனலொக்காகவும் (modulation) எனலொக் வடிவிலுள்ளதை டிஜிட்டல் (demodulation) வ்டிவிலும் மாற்றுகிறது.

Offline:
கணினி இணையத்தில் இணைந்திராத சந்தர்ப்பத்தை ஓப்லைன் எனப்படுகிறது. . Online: இணையத்தில் எமது கணினி இணந்திருக்கும் போது கணினி ஓன்லைனில் இருப்பதாகச் சொல்லப்படும்.

Password: ஒரு பைலை, கணினியை அல்லது வலையமைப்பை அதிகாரமளிக்கப்பட்வர்கள் மாத்திரம் அனுகுவதற்குப் பயன்படும் எழுத்துக்கள் மற்றும் எண்களைக் கொண்ட ஒரு ரகசிய சொல்.

Portal:
மின்னஞ்சல், தேடற்பொறி ,போன்ற பல வகைப்பட்ட சேவைகளை வழங்கும் ஒரு இணைய தளத்தை வெப் போட்டல் எனப்படுகிறது. உதாரணம் : யாஹூ

Server
ஒரு வலையமைப்பில் தனது வளங்களையும் தகவல்களையும் ஏனைய கணினிகளுடன் பகிர்ந்து கொள்ளும் கணினிகளை சேர்வர் அல்லது Host ஹோஸ்ட் எனப்படுகிறது.

Search Engine
வேர்ல்ட் வைட் வெப் எனும் உலகலாவிய வலையமைப்பில் எமக்குத் தேவையான தகவல்கள் எந்த வலைத்தளங்களில் உள்ளன என்பதை தேடிப் பட்டியலிடும் மென்பொருளையே தேடற் பொறி எனப்படுகிறது. உதாரணம் : கூகில், யாஹூ, பிங்

Sub Domain: 
டொமேன் பெயரில் ஒரு பகுதியே சப் டொமேன் எனப்படுகிறது. உதாரணமாக madeena.sch.lk, என்பதில் sch என்பது பிரதான டொமேன் எனவும் madeena என்பது சப்டொமேன் எனவும் அழைக்கப்படுகிறது.

Spam
எமக்குத் அறிமுகமில்லாத நபர்களிடமிருந்து நாம் கேட்காமலேயெ எமது மின்னஞ்சல் முகவ்ரிக்கு வந்து சேரும் வேண்டாத (குப்பை) மின்னஞ்சல்களையே ஸ்பாம் எனப்படுகிறது.

Top-level domains:
டொமேன் நேம் சிஸ்டம் எனப்படும் இலக்கங்களுக்குப் பதிலாக சொற்களைப் பயன் படுத்தும் முறையில் ஒரு பிரதான பிரிவே டொப் லெவல் டொமேன் எனப்படுகிறது. உதாரணம் .com, .gov, .edu.

Uniform Resource Locator (URL): உலகலாவிய வலைத் தளத்தில் உள்ள ஒரு ஆவணத்தின் முகவரியைக் குறிக்கிறது. இதனையே வெப் எட்ரஸ் எனவும் அழைக்கப்படுகிறது. உதாரணம்

Upload
இணையத்தில் அல்லது வலையமைப்பொன்றில் ஒரு கணினியிலி ருந்து மற்றுமொரு கணினிக்கு பைல் ஒன்றை அனுப்புவதை அப்லோட் எனப்படுகிறது.

World Wide Web
ஹைப டெக்ஸ்ட் ஆவணங்களையும் தரவுத் தளங்களையும் கொண்ட இணைய சேர்வர்களையே வேர்ல்ட் வைட் வெப் (உலகலாவிய வலத்தளம்) எனப்படுகிறது. இது 1989 ஆம் ஆண்டு Tim Berners-Lee, எனும் பிரித்தானியரால் வடிவமைக்கப்பட்டது.

Website :
HTML எனும் வலை மொழி கொண்டு உருவாக்கிய, ஹைபடெக்ஸ்ட் ஆவணத்தையே இனையதளம் (வெப்சைட்) எனப்படுகிறது. இந்த ஆவணம் ஒரு நிறுவனம் சார்ந்த அல்லது தனி நபர் சார்ந்த அல்லது ஏதோவொரு விடயம் சார்ந்த தகவல்களைக் கொண்டிருக்கும். இது ஒன்றோ அல்லது ஒன்றிற்கு மேற்பட்ட பக்கங்களையோ (web pages) கொண்டிருக்கும் இவை ஹைபலிங் கொண்டு இணைக்கப்பட்டிருக்கும். இதனை இணையத்தில் இணைந்திருக்கும் ஒரு வெப் சேர்வரில் சேமிக்கப்படும். அந்த இணைய தளத்திற்கெனப் பதிவு செய்யப்படும் பெயரைக் கொண்டு (வெப் எட்ரஸ்) கொண்டு அந்த தளத்தை உலகின் எப்பாகத்திலிருந்தும் அணுகலாம்.

-அனூப்

Sunday, December 13, 2009

Is your computer running slowly?

உங்கள் கணினி நத்தை வேகத்திலா இயங்குகிறது?

உங்களுக்குப் பிடித்த ஒரு கணினி விளையாட்டில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது திடீரென நீலத் திரை (Blue Screen) தோன்றி கணினியின் இயக்கத்தை நிறுத்தி விடுகிறது.

இணைய தளங்களைப பார்வையிட்டுக் கொண்டிருக்கும போது (Browser) ப்ரவுஸர் வழமையை விட மெதுவாக இயங்குகிறது அல்லது எந்த இயக்கமும் அற்றுப் போகிறது.
முக்கிய ஆவணமொன்றைத் தயாரித்துக் கொண்டிருக்கும் போது அதனை சேமிக்கு முன்னரே கணினி க்ரேஷ் (crash) ஆகி செயலற்றுப் போகிறது

இவ்வாறான சந்தர்ப்பங்களில் கணினியைத் தரையில் போட்டு பந்தாடலாம் போல் பலருக்கும் தோன்றலாம்.

கணினி மெதுவாக இயங்குவதற்குப் பல காரணங்களைக் கூறலாம். இவற்றுள் ஏதோ ஒரு காரணத்தினாலோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட காரணங்களினாலோ கணினி மெதுவாக இயங்க வாய்ப்புள்ளது.

இவற்றிற்கு அடிப்படைக் காரணங்களாக வன்பொருள் சிக்கல், மென்பொருள் சிக்கல் மற்றும் வைரஸ் பாதிப்பு என்பவற்றைக் குறிப்பிடலாம். இந்தப் பிரச்சினைக்கு, அனேகமான கணினிப் பயனர்கள் முகம் கொடுக்க வேண்டி ஏற்படுவதால் சில பொதுவான காரணங்களை இங்கு பட்டியலிட நினைக்கிறேன்.
  1. · கணினியில் எப்லிகேசன் மென்பொருள்களை அவ்வப்போது நிறுவும் போது அவற்றுலள் சில எப்லிகேசன்கள் விண்டோஸ் ஸ்டாட் அப் (Startup) போல்டருக்குள் எங்கள் அனுமதி இல்லாமலேயே நுளைந்து கொள்ளும். ஸ்டாட் அப்பில் அதிக எண்ணிக்கையிலான எப்லிகேசன்கள் இருக்குமானால் அனைத்தையும் விண்டொஸ் ஆரம்பிக்கும் போதே நினைவகத்தில் ஏற்ற வேண்டியிருக்கும். அதற்கு அதிக் நேரம் எடுத்துக் கொள்ளும். அதன் காரணமாக விண்டோஸ் ஆரம்பிக்கவும் அதிக நேரம் பிடிக்கும்.. எனவே ஸ்டாட் அப்பில் இயங்கும் ப்ரோக்ரம்களின் அளவை குறைத்துக் கொள்ளுங்கள். அதற்கு நீங்கள் Start மெனுவில் Run தெரிவு செய்து msconfig என் டைப் செய்ய வரும் System Configuration Utility விண்டோவில் Startup தெரிவு செய்து தேவையறற எப்லிகேசன்களை ஸ்டாட் அப்பிலிருந்து நீக்கிக் கொள்ளலாம்.
  2. · பொருத்த மாற்ற BIOS (Basic Input Output System) செட்டிங்கும் கணினியின் இயக்கத்தில் பாதிப்பை உண்டாக்கலாம். எனவே BIOS செட்டிங் உரிய முறையில் உள்ளதா என்பதை மதர் போர்டுடன் வழங்கப்படும் கை நூலுதவியுடன் சரி பார்த்துக் கொள்ளுங்கள்.
  3. விண்டோஸ் இயங்கு தளத்தின் மிக முக்கிய பகுதியாக ரெஜிஸ்ட்ரி (Registry) கருதப் படுகிறது. கணினியிலுள்ள அனைத்து வன்பொருள் மற்றும் மென்பொருள்களின் விவரங்களைக் கொண்ட ஒரு தரவுத் தளமாக ரெஜிஸ்ட்ரி தொழில் படுகிறது. ரெஜிஸ்ட்ரியில் குளருபடி நிகழும் போது இயங்கு தளம் அந்த விவரங்கள் அனைத்தையும் தேடிப் பெற அதிக நேரத்தை எடுத்துக் கொள்கிறது. வழி காட்டி இல்லாமல் ஒரு ஊருக்குப் போக முற்பட்டு பல இடங்களிலும் சுற்றி அலைந்து விட்டு இறுதியாகப் போக வேண்டிய இலக்கை பல் மணி நேரம் கழித்து சென்றடைவதைப் போன்றே கணினியும் இந்த விவரங்ககளைத் தேடி இறுதியில் தனது இலக்கை அடைகிறது.. சில வேளை இவ்வாறு தேடி கிடைக்காத போது கணினி “க்ரேஸ்” ஆகி விடுவதுமுண்டு. எனவே Registry optimizer மற்றும் Cleaners யூட்டிலிட்டி கொண்டு அவ்வப்போது கணினியை ஸ்கேன் செய்து ரெஜிஸ்ட்ரியை சுத்தம் செய்து கொளள வேண்டும்.
  4. வைரஸ் மற்றும் ஸ்பைவேர் போன்றனவும் கணினி மெதுவாக செயற்படக் காரணாமாய் அமைகிறது. கணினி வைரஸ் பாதிப்புக்குள்ளாகும்போது கணினியின் முக்கிய வளங்களைப வைரஸ் பயன் படுத்த ஆரம்பிக்கிறது. இதன் காரணமாக கணினி மெதுவாக இயங்க ஆரம்பிக்கிறது. கணினியில் போதிய பாதுகாப்பு இல்லாது இணையத்தில் இணையும் போது வைரஸ் மற்றும் கணினியில் எமது நடவடிக்கைகளை வேவு பார்க்கும் ஸ்பைவேர் (spyware) என்பன நமது கணினிக்குள் ஊடுறுவுகின்றன.. எனவே ஒரு சிறந்த வைரஸ் எதிர் மென்பொருளுடன் (Anti Virus Program) ஸ்பைவேர் கண்டறியும் மென்பொருளையும் நிறுவிக் கொள்வதன் மூலம் வைரஸ் மற்றும் மற்றும் ஸ்பைவேரிலிருந்து பாதுகாத்துக் கொள்ள முடிவதோடு கணினியின் இயங்கு திறனையும் அதிகரிக்கலாம்.
  5. · குறைந்தளவு மின் சக்தியில் சீபீயூ (CPU) இயங்குமாறு செட்டிங் மாற்றப்பட்டிருக்கலாம். இதன் காரண்மாகவும் சிபியூவின் வேகம் மந்த நிலையடையும். அதனால் பயோஸ் செட்டிங் மற்றும் விண்டோஸ் கண்ட்ரோல் பேனலில் Power Options திற்நது அதனை உறுதி செய்து கொள்ளுங்கள்.
  6. · சீபீயூ அதிக அளவு வெப்பமடைவதாலும் கணினி மெதுவாக இயங்க ஆரம்பிக்கிறது. அதனால் சீபீயுவின் வெப்பத்தைத் தணிக்கும் ஹீட் சிங்க் (Heat Sink) மற்றும் விசிறி (Cooling Fan) என்பவறறைப் பரிசோதித்துக் கொள்ளுங்கள். சீபீயூ வெப்ப நிலையையும் பரிசோதித்துக் கொள்ளுங்கள்,
  7. கணினியின் வேகத்தில் நினைவகமும முக்கிய பங்களிப்பைச் செலுத்துகிறது. தற்போது பயன்பாட்டிலுள்ள இயங்கு தளம் மற்றும் எப்லிகேசன் மென்பொருள்கள் இயங்குவதற்கு அதிக அளவு நினைவகமும் அவசியம். அதனால் நினைவகத்தின் அளவை அதிகரித்துக் கொளவதன் மூலமும் கணினியின் வேகத்தை அதிகரிக்கலாம். எனினும் மதர்போட் ஆதரிக்கும் உச்ச அளவு நினைவகத்தை கணினி ஏற்கனவே கொண்டிருந்தும் கணினி மெதுவாக இயங்கினால் மேலும் அதிக அளவு நினைவகத்தை ஆதரிக்கக் கூடிய மதர்போர்டை வாங்கிப் பொருத்திக் கொள்ளுங்கள்.
  8. · ஹாட் டிஸ்கில் பைல்கள் ஒன்றன் பின் ஒன்றாக வரிசையாக் அல்லாமல் சிறு சிறு பகுதிகளாக சிதறலாகவே சேமிக்கப்படும். கணினியின் தொடர்ச்சியான பாவனையின் போது இந்த சிதறல்களின் எண்ணிக்கை அதிகரித்து அதன் காரணமாக உரிய பைலைத் தேடிப் பெற அதிக நேரம் எடுக்கும். எனவே ஹாட் டிஸ்கை குறிப்பிட்ட சில கால இடை வெளிகளில் அதனை டிப்ரேக்மண்ட் (Defragment) செய்து கொள்ள வேண்டும். டிப்ரேக்மண்ட் செயற்பாட்டில் பைல்கள மீள ஒழுங்கு படுத்தப்படுகின்றன. அதன் மூலமும் கணினியின் வேகத்தை அதிகரிக்கலாம். ஹாட் டிஸ்கை டிப்ரேக்மண்ட் செய்து கொள்ளும் வசதியை விண்டோஸ் இயங்கு தளம் தன்னகத்தே கொண்டுள்ளது.


- அனூப் -

Tuesday, December 08, 2009

Unmovable Files என்றால் என்ன?

இயங்கு தளத்தினால் தற்போது பயன் படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் பைல்களை அழிக்கவோ அல்லது இடமாற்றம் செய்யவோ முடியாது என்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். அவ்வாறான பைல்களையே (Unmovable Files) அன்மூவபல் பைல்கள் எனப்படுகின்றன. பேஜ் (Page file) பைல் மற்றும் MFT பைல்கள் (Master File Table) என்பவற்றை iஇடமாற்றம் செய்ய முடியாத பைல்களுக்கு உதாரணமாகக் கொள்ளலாம்.
பிரதான நினைவகமான RAM இல் வெற்றிடம் போதுமான அளவு இல்லாத போது ஹாட் டிஸ்கில் அதற்கென ஒரு குறிப்பிட்ட பகுதி ஒதுக்கப்பட்டு ஹாட் டிஸ்கும் நினைவகமாகச் செயற்படும் இதனையே பேஜ் பைல் / ஸ்வொப் பைல் (Swap file) அல்லது வேர்ச்சுவல் மெமரி (Virtual Memory) எனப்படுவது
அதேபோல் ஹாட் டிஸ்கிலுள்ள ஒவ்வொரு பைல் பற்றிய விவரங்களையும் கொண்டிருக்கும் ஒரு அட்டவணையே Master File Table (MFT) எனப்படுகிறது. இது ஹாட் டிஸ்கில் நிரந்தரமாக ஓரிடத்தில் சேமிக்கப்பட்டிருக்கும்.
இந்த MFT பைல் மற்றும் பேஜ் பைல்கள் இடமாற்றம் செய்ய முடியாத பைல்களாக விண்டோஸில் அடையாளமிடப்படுகின்றன.
ஹாட் டிஸ்கில் பைல் சேமிக்கப்படும்போது, இயங்கு தளம் எங்கெல்லாம் வெற்றிடம் காணப்படுமோ அவ்விடங்களில் புதிய பைல்களை சேமித்து விடும். ஹாட் டிஸ்கின் வெற்றிடத்தைப் பொறுத்தும் பைலின் அளவு பெரிதாக இருக்கும் பட்சத்திலும் அந்த பைல் முழுமையாக அல்லாமல் சிறு சிறு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு சிதறலாக சேமிக்கப்படும். இதனையே ப்ரேக்மண்ட்ஸ் (Fragments) எனப்படுகிறது. இந்த பைல் பகுதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது கணினியின் வேகத்தில் மந்த நிலை ஏற்படலாம் அல்லது சில வேளை பைல்களை இழக்கவும் நேரிடலாம். ஹாட் டிஸ்கை ஒரு குறித்த் கால இடைவெளிகளில் டிப்ரேக்மண்ட் செய்து கொள்வதன் மூலம் இவ்வாறான பாதிப்புகளிலிருந்து தவிர்ந்து கொள்ளலாம். ஹாட் டிஸ்கை டிப்ரேக்மண்ட் செய்வதற்கென Disk Defragmenter எனும் யூட்டிலிட்டி விண்டோஸுடன் இணைந்து வருகிறது.
டிப்ரேக்மண்ட் செய்யும்போது அங்கொன்று இங்கொன்றாக சிதறிக் கிடக்கும் ஒரு பைலின் பகுதிகள் அருகருகே தொடர்ச்சியாக அமையும் வண்ண்ம் இடமாற்றம் செய்யப்படுகின்றன.
டிப்ரேக்மண்ட் செய்யும்போது, டிப்ரேக்மண்ட் விண்டோ டிஸ்க் மேப்பில் (Disk Map) பச்சை நிறத்தில் சில பகுதிகளைக் காண்பிப்பதை நீங்கள் அவதானித்திருக்கலாம். இடமாற்றம் செய்ய முடியாத் பைல்கள் உள்ள இடங்களையே விண்டோஸில் இவ்வாறு காண்பிக்கப்படுகிறது.. ஏனைய பகுதிகளை டிப்ரேக்மண்ட் செய்த பிறகும் இந்த அன்மூவபல் பைல்கள் ஹாட் டிஸ்கில் முன்னர் இருந்த இடத்திலேயே சிதறலாகக் இருக்கும்.
பேஜ் பைல் அலல்து ஸ்வொப் பைல்களை டிப்ரேக்மண்ட் செய்ய முடியாது என்பதால் அவற்றை அழித்து விட்டு டிப்ரேக்மண்ட் செய்யலாம். எனினும் அவற்றை வழமையான முறையில் அழிக்கவும் முடியாது. அவற்றை அழிப்பதற்குப் விண்டோஸில் பின்வரும் வழிமுறையைக் கையாளுங்கள். Control Panel System Advanced tab Performance Settings Advanced tab Change தெரிவு செய்யுங்கள். அங்கு Virtual Memory என்பதன் கீழ் No paging file தெரிவு செய்து Set என்பதைக் க்ளிக் செய்யுங்கள். பின்னர் கணினியை மறுபடி இயக்கி டிப்ரேக்மண்ட் செயற்பாட்டை ஆரம்பிக்கலாம்.
டிப்ரேக்மண்ட் செய்த பிறகு மேற்சொன்னவாறு Virtual Memory எனுமிடத்திற்குப் பிரவேசித்து Custom size என்பதைத் தெரிவு செய்து Initial size மற்றும் Maximum size எனுமிடங்களில் ஒரே அளவான ஹாட் டிஸ்கில் இடத்தை ஒதுக்குங்கள். இந்த அளவானது, கணினியின் பிரதான நினைவகத்தின் இரண்டு முதல் நான்கு மடங்காக இருக்க வேண்டும் என்பதையும் கவனத்தில் கொள்ளுங்கள்.
ஹாட் டிஸ்கிலுள்ள் மற்றுமொரு இடமாற்றம் செய்ய முடியாத் பைல் வகையான MFT எனும் பைல் அட்டவணையாகும்.. ஹாட் டிஸ்கில் பைல்களின் அளவு அதிகரிக்கும்போது இந்த MFT யின் அளவும் அதிகரிக்கிறது. இந்த MFT பைலும் அதன் உச்ச அளவைத் தாண்டும் போது சிறு சிறு பகுதிகளாக்கப்படுகிறது.
ரெஜிஸ்ட்ரியில் சிறிய மாற்றததைச் செய்வதன் மூலம் MFT பைலுக்கு ஒதுக்கப்பட்டுள்ள் இடத்தை மேலும் அதிகரித்துக் கொள்ளலாம். அதற்கு நீங்கள் Start → Run → regedit ஊடாக ரெஜிஸ்ட்ரி எடிட்டரைத் (Registry Editor) திறந்து HKEY_LOCAL_MACHINE\SYSTEM\ CurrentControlSet\Control\Filesystem வரை பயணித்து NtfsMftZoneReservation என்பதை டபள் க்ளிக் செய்து அதன் வலது புறம் 2 முதல் 4 வரையிலான ஒரு இலக்கத்தை உள்ளீடு செய்யுங்கள். இரண்டை டைப் செய்வதன் மூலம் 25 வீதத்தையும் 3 ஐ டைப் செய்வதன் மூலம் 37.5 வீதத்தையும் 4 ஐ உள்ளீடு செய்வதன் மூலம் 50 வீதத்தையும் ஹாட் டிஸ்கில் ஒதுக்கலாம்.
-அனூப்-

Why do you need to partition a hard disk?


ஹாட் டிஸ்கை ஏன் Partition செய்ய வேண்டும்?

ஹாட் டிஸ்க் ஒன்றைக் கணினியில் பொருத்தியதும் அதனை போமட் செய்து பயன்படுத்த ஆரம்பிக்கு முன்னர் (Partition) பாட்டிசன் செய்து கொள்ள வேண்டும். என்பதை நீங்கள் அறிந்திருக்கலாம்.ஒரு ஹாட் டிஸ்கின் மொத்த சேமிப்பிடத்தைப் பகுதி பகுதியாகப் பிரித்துக் கொள்வதையே பாட்டிசன் எனப்படுகிறது. பாட்டிசனை உருவாக்கிய பின்னர் அதனை போமட் (format) செய்து பயன் படுத்த ஆரம்பிக்கலாம். 

பாட்டிசனை உருவாக்கும்போது ஹாட் டிஸ்கின் மொத்த கொள்ளளவிலிருந்து ஒரு குறிப்பிட்ட பகுதி ஒரு பாட்டிசனுக்காக ஒதுக்கப் படுகிறது. உதாரணமாக ஒரு
80 GB கொள்ளளவு கொண்ட ஒரு ஹாட் டிஸ்கை 80 GB கொண்ட ஒரே பாட்டிசனாகவும் பயன் படுத்தலாம். அல்லது அதனை இரண்டு, மூன்று அல்லது நான்கு பாட்டிசனாகவும் பிரித்துக் கொள்ளலாம். ஆனால் அதிக கொள்ளளவு கொண்ட ஹாட் டிஸ்கை ஒரே பாட்டிசனாக பயன்படுத்துவது அரிது. இதே 80 GB ஹாட் டிஸ்கை இரண்டு பாட்டிசனாகப் பிரிக்கும்போது இயங்கு தளம் மற்றும் அப்லிகேசன் மென்பொருள்களை சேமிப்பதற்கு 20 GB யில் ஒரு பாட்டிசனும் ஏனைய பைல்களைச் சேமிப்பதற்கு 60 GB யில் ஒரு பாட்டிசனும் உருவாக்கிக் கொள்ளலாம்.


ஒரு பாட்டிசனை உருவாக்குவதற்குப் பதிலாக ஒன்றுக்கு மேற்பட்ட பாடிசன்களை ஏன் உருவாக்க வேண்டும் என நீங்கள் வினவலாம். ஒரு ஹாட் டிஸ்கைப் பாட்டிசன் செய்வதன் மூலம் பல அனுகூலங்கள் கிடைக்கப் பெறுகின்றன.


·
ஹாட் டிஸ்கின் கொள்ளளவு அதிகமாயிருக்கும் பட்சத்தில் சில இயங்கு தளங்கள் அதனை ஆதரிக்காது. அவ்வாறான சந்தர்ப்பங்களில் ஹாட் டிஸ்கைப் பல பகுதிகளாகப் பிரித்தே பயன்படுத்த வேண்டியிருக்கும். ஹாட்டிஸ்கின் கொள்ளளவிற்கேற்ப அதனைப் பல பகுதிகளாகப் பிரித்துக் கொள்ளலாம்.

விண்டோஸ் இயங்கு தளத்தில் விண்டோஸ் மற்றும் மென்பொருள்களை ஒரு பாட்டிசனிலும் டேட்டாவை ஏனைய பாட்டிசனிலும் சேமித்துக் கொள்ளும் வழக்கம் நடை முறையிலுள்ளது. அதன் மூலம் விண்டோஸில் ஏதும் சிக்கல் ஏற்படும் போது இயங்கு தளம் நிறுவப்பட்டிருக்கும் பாட்டிசனை மாத்திரம் போமட் செய்து விட்டு மறுபடியும் விண்டோஸை நிறுவிக் கொள்ளக் கூடிய வசதி கிடைக்கிறது. இதன் காரணமாக் ஏனைய பைல்களை இழக்க நேரிடாது.

சில வருடங்களுக்கு முன்னர் வெளிவந்த இயங்கு தளங்களில் ஒரு பாட்டிசனின் உச்ச அளவு வரையறுக்கப்பட்டிருந்தது. எனவே அதிக கொள்ளளவு கொண்ட ஹாட் டிஸ்கில் அந்த இயங்கு தளம் ஆதரிக்கும் உச்ச அளவிலான பாட்டிசனை உருவாக்கி விட்டு பயன் படுத்தப்படாத இடத்தில் மேலும் சில பாட்டிசன்கள உருவாக்க வேண்டியிருந்தது.

சில வேளை ஒரு இயங்கு தளம் பயன் படுத்தும் பைல் முறைமையை (file system), மற்றுமொரு இயங்கு தளம் ஆதரிக்காது விடலாம். எனவே வெவ்வேறு பைல் சிஸ்டம்களை ஆதரிக்கும் இயங்கு தளங்களை ஒரே கணினியில் நிறுவ முற்படும்போது வெவ்வேறு பாட்டிசன்களை உருவாக்க வேண்டும்.

ஒரு பைல் சிஸ்டம் ஒரு பாட்டிசனில் டேட்டாவை சேமிக்கும்போது பாட்டிசனின் அளவு அதிகமாயிருக்கும்போது ஹாட் டிஸ்கில் காளியிடம் பயன் படுத்தப்படாது விரயமாவதற்கான வாய்ப்புள்ளது. சிறிய அளவிலானா ஒன்றுக்கு மேற்பட்ட பாட்டிசன்களை உருவாக்கும்போது பைல் சிஸ்டம் மூலம் உருவாக்கப்படும் விரயத்தைக் குறைக்கலாம். அதாவது சிறிய பாட்டிசன்கள் சிறிய க்லஸ்டர்களை உருவாக்கும். ஒரு க்லஸ்டர் என்பது ஒரு பாட்டிசனில் சேமிக்கக் கூடிய டேட்டாவின் மிகவும் சிறிய பகுதியாகும். பெரிய பாட்டிசன் 16 KB அளவிலான கலஸ்டரைக் கொண்டிருக்கும். அதாவது ஒரு எழுத்தைக் (character) கொண்ட ஒரு பைலை சேமிக்க 16 KB அளவு இடத்தை எடுத்துக் கொள்ளும். சிறிய பாட்டிசன்களில் அதே பைல் 4 KB அளவு இடத்தையே பிடிக்கும்.

ஹாட் டிஸ்கில் இயங்கு தளத்தை ஆரம்பித்து வைப்பதற்கான கட்டளை (MBR) Master Boot Record எனும் விவரங்கள் ஹாட் டிஸ்கின் ஒரு பகுதியில் சேமிக்கப்பட்டிருக்கும். அந்த MBR இல் ஒரு (Partition Table) பாட்டிசன் அட்டவணையிருக்கும். அந்த பாட்டிசன் அட்டவணை ஹாட் டிஸ்க் பாட்டிசன் பற்றிய விவரங்களைக் கொண்டிருக்கும். இந்த பாட்டிசன் அட்டவணை மேலும் நான்கு பாட்டிசன் அட்டவணைகளைக் கொண்டிருக்கும். இந்த ஒவ்வொரு அட்டவனையும் ஒவ்வொரு பாட்டிசன் பற்றிய தகவல்களைக் கொண்டிருக்கும். இதன் காரணமாக ஒரு ஹாட் டிஸ்கில் நான்கு பாட்டிசன்களை உருவாக்க முடிகிறது. இதனை primary partitions எனப்படுகிறது. இந்த வரையரையின் காரணமாகவே extended partition எனும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. நான்கு primary partition இல் ஒரு பாட்டிசனை extended partition பாட்டிசனாக மாற்றுவதன் மூலம் அதனுள்ளே மேலும் 24 பாட்டிசன்களை உருவாக்கலாம். இதனை logical partitions எனப்படுகிறது.

ஒவ்வொரு ஹாட் டிஸ்கிலும் அதனுள் உருவாக்கக் கூடிய நான்கு ப்ரைமரி பாட்டிசன்களில் ஒன்றை active partition ஆக செயற்படத்தக்க நிலைக்கு மாற்ற வேண்டும். அந்த எக்டிவ் பாட்டிசனையே, MBR இயங்கு தளத்தை ஆரம்பிப்பதற்குப் பயன் படுத்துகிறது. ஒரு பாட்டிசனை மாத்திரம் எக்டிவ் பாட்டிசனாக மர்ற்றும் போது ஒன்றுக்கு மேற்பட்ட இயங்கு தளங்களை வெவ்வேறு பாட்டிசனில் நிறுவும் போது அவற்றை எவ்வாறு ஆரம்பிப்பது எனும் கேள்வி எழலாம். பூட் லோடர் ப்ரோக்ரமை (Boot loader) இந்த எக்டிவ் பாட்டிசனில் நிறுவுவதன் மூலம் இதற்குத் தீர்வு கிடைகிறது. கணினி இயங்க ஆரம்பிக்கும்போது MBR ஐ வாசித்தறிந்து எக்டிவ் பாட்டிசனைக் கண்டு கொள்கிறது. இங்கு பூட் லோடர் ப்ரோக்ரம் சேமிக்கப்பட்டுள்ளது. இந்த பாட்டிசனிலிருந்து இயங்கு தள்ம் ஆரம்பிக்குபோது போது பூட் லொடர் ப்ரோக்ரம் இயங்க ஆரம்பித்து எந்த இயங்கு தளத்தை ஆரம்பிப்பது என வினவுகிறது.

அனேக இயங்கு தளங்கள் ஹாட் டிஸ்கைப் பாட்டிசன் செய்ய fdisk எனும் கட்டளையைப் பயன் படுத்துகின்றன. அதே வேளை சில இயங்கு தளங்கள் பாட்டிசன் செய்வதற்கான வேறு கருவிகளையும் கொண்டுள்ளன.

-அனூப்-

Which image file format is better?

எந்த Image File சிறந்தது?

டிஜிட்டல் கேமரா மூலம் எடுக்கப்பட்ட படங்கள், இணையத்தி லிருந்து டவுன்லோட் செய்த படங்கள் மற்றும் கிரபிக்ஸ் மென்பொருள் கொண்டு உருவாக்கிய படங்கள் என கணினியால் கையாளக் கூடிய பல வகையான படங்கள் (Digital Images) இருப்பதை நீங்கள் அறிவீர்கள். ஒவ்வொரு இமேஜ் பைல் போமட்டும் கணினியில் ஒரு குறிப்பிட்ட ஒரு வழி முறையில் சேமிக்கப்படுகின்றன. அத்தோடு ஒவ்வொரு இமேஜ் பைல் போமட்டும் அவற்றிற்குரிய சாத்க பாதகங்களைக் கொண்டுள்ளதுடன் வெவ்வேறு சந்தர்ப்ப்பங்களில் அவை ஒவ்வொன்றும் பயன் படுத்தப்படுகின்றன. ஒவ்வொரு இமேஜ் பைல் வடிவங்களைப் பற்றியும் அலசுவதற்க்கு முன்னர் இமேஜ் பைல்கள் கொண்டிருக்கக் கூடிய பண்புகள் சில வற்றை முதலில் பார்ப்போம்.

Compression
படங்களின் பைல் அளவைக் குறைக்கும் செயற்பாட்டை கம்ப்ரெஸ் எனப்பபடுகிறது. கம்ப்ரெஸ் செய்யப்பாடத படங்களின் பைல் அளவு பெரிதாக இருக்கும். இது சேமிப்பு ஊடகங்களில் அதிக இடத்தைப் பிடித்துக் கொள்வதோடு இணையம் வழியே பகிரும்போது அதிக நேரமும் எடுக்கும். படங்களைக் கம்ப்ரெஸ் செய்யும்போது பைல் அளவு குறைவதோடு அதனை எந்த ஒரு ஊடகத்திலும் இலகுவாக சேமிக்கவோ அல்லது இணையம் வழியே பரிமாறிக் கொள்ளவோ முடியும். ஒவ்வொரு வகையான் பைல் போமட்டும் வெவ்வேறு வகையான கம்ப்ரெஸ்ஸன் உத்திகளைப் பயன் படுத்துகின்றன.

Lossy
ஒரு பைல் போமட்டில் பயன்படுத்தப்படும் கம்ப்ரெஸ்ஸன் முறையானது படத்தின் முக்கியமல்லாதது எனக் கருதும் தகவல்களைப் புறக்கணிக் கின்றன. இந்த கம்ப்ரெஸ் முறையானது படத்தின் அளவை முன்னரை விட சிறிதாக்கி விடுகிறது. அத்தோடு படத்தின் தரமும் குறைகிறது. இதனையே Lossy எனப்படுகிறது தகவல் இழப்புகள் இல்லாத lossless கம்ப்ரெஸ் முறையில் படங்களைச் சேமிக்கும்போது இந்த வித்தியாசத்தை நீங்கள் அவதானிக்க முடியாது.

Animations
சில பைல் வடிவங்கள் அசைவுகளை (Animations) ஏற்படுத்தக் கூடியவாறான பண்புகளைக் கொண்டிருக்கும். ஒரு படத்தினுள் அல்லது சட்டத்தினுள் (frame) ஒன்றுக்கு மேற்பட்ட படங்களை நுளைத்து அவற்றை ஒன்றன் பின் ஒன்றாக விரைவாகத் தோன்றச் செய்வதன் மூலம் படங்கள் அசைவது போன்ற தோற்றத்தை உருவாக்கப்படுகிறது. .

Maximum Colors
ஒவ்வொரு இமேஜ் போமட்டும் பயன் படுத்தும் வண்ணங்களின் என்ணிக்கையில் ஒரு வரையரையுண்டு. ஒரே வண்ணத்தை அதிக அள்வில் பயன்படுத்தும் படங்களுக்கு குறைந்த எண்ணிக்கையான வண்ணங்களைப் பயன் படுத்தும் இமேஜ் போமட்டுகள் பொருத்தமான தாகும். மாறாக கேமரா கொண்டு எடுக்கப்பட்ட படங்களைப் போன்று பல வண்ணங்களின் கலவையாக உருவங்களை உருவாக்க அதிக எண்ணிக்கையிலான வண்ணத்தைப் பயன் படுத்தும் இமேஜ் போமட்டுகள் சிறந்ததாகும்.

Transparency
ட்ராண்ஸ்பரென்சி எனும் இந்த பண்பு ஒரு படத்திலுள்ள ஒரு வண்ணத்தை ஒளி புக விடும் தன்மை கொண்டதாக மாற்றிவிடுகிற்து. இதன் காரணமாக ஒரு இணையதளத்தின் அல்லது ஒரு ஆவணத்தின் பின்னணி வண்ணம் அந்த இணைய தளத்தில் அல்லது ஆவணத்தில் உள்ள படத்தின் ஊடாக் நமக்குத் தோற்றமளிக்கிறது அல்லது அந்தப் படம் தனித்து நிற்காமல் ஒரு ஆவணத்தின் பின்னணி வண்ணத்தோடு கலந்து விடுகிறது .

Alpha Channel
அல்பா சேனல் எனப்படுவது ட்ரான்ஸ்பெரன்ஸி பொன்றதே. இதன் முலம் ஒரு படத்தின் குறித்த ஒரு பகுதியை மட்டும் ஒளி புகவிடும் தன்மை கொண்டதாக மாற்ற முடிகிறது.

Interlace 
ஒரு படத்தை இண்டர்லேஸ் முறைப்படி சேமிக்கப்பட்டிருப்பின் அந்த பைலை கணினித் திரையில் பகுதி பகுதியாக மேலிருந்து கீழ் நோக்கி படிப்படியாக திரையில் தோன்றச் செய்யலாம்.. குறைந்த வேகம் கொண்ட டயல்-அப் இணைய இனைப்பில் படங்கள் டவுன்லோட் ஆக அதிக நேரம் எடுத்துக் கொள்வதால். இதன் முலம் ஒரு படம் முழுமையாக டவுன்லோட் ஆகு முன்னரேயே அந்தப், படத்தின் பகுதிகளைப் பார்க்க முடிகிறது.

GIF - Graphics Interchange Format
அனேக இணைய தளங்களில் பயன்படுத்தப்படும் ஒரு பைல் போமட் GIF ஆகும்.. இந்த வடிவத்தில் மொத்தம் 256 வண்ணங்களே பயன் படுத்தப்படுவதால் சிறிய ஐக்கன், பட்டன் போன்ற ஒரே வண்ணம் அதிக அளவில் பயன்படுத்தப்படும் சந்தர்ப்பங்களுக்கு இந்த போமட் ஏற்றது. எனினும் போட்டோவாக அச்சிட்டுக் கொள்ள இந்த போமட் பொருத்தற்றது. ஜிப் பைல்கள் மேலே சொன்ன ட்ரான்ஸ்பரன்சி., இண்டர்லேஸ் மற்றும் எனிமேசன் என்பவற்றை ஆதரிப்பதால் இணைய தளங்கலுக்குப் பொருத்தமான ஒரு பைல் போமட்டாகக் கருதப்படுகிறது. .

JPG - Joint Photographic Experts Group
JPEG எனபது (lossy) தகவல் இழப்புகள் கொண்ட ஒரு பைல் போமட்டாகும். இது டிஜிட்டல் கேமரா கொண்டு எடுக்கப்படும் போட்டோ இமேஜுக்குப் பொருத்தமான ஒரு பைல் வடிவமாகும். இது 16.7 மில்லியன் வரையிலான வண்ணங்களைக் கையாள முடிவதுடன் இயற்கையில் காணும் வண்ணங்களை எந்த மாறுதலுமின்றிக் காண்பிக்கக் கூடியது. இந்த பைல்களை கம்ப்ரெஸ் செய்ய முடிந்தாலும் கம்ப்ரெஸ்ஸின் அளவு அதிகரிக்கும் போது தகவல் இழப்பும் ஏற்படும். எனினும் JPEG ஐ விட TIFF போமட் அதிக தரம் கொண்டிருந்தாலும், TIFF பைல்கள் அதிக இடத்தைப் பிடித்துக் கொள்பவை. அதனால் JPEG போமட்டே டிஜிட்டல் கேமராக்களில் அதிகளவில் பயன் படுத்தப்படு கின்றன. இவை எனிமேசன் ட்ரான்ஸ்பரன்சி என்பவற்றை ஆதரிக்காது.

PNG - Portable Network Graphics
GIF பைல் போமட்டுக்கு Unisys எனும் நிறுவனம் காப்புரிமை கோரியதன் விளைவாக இணைய தளங்களில் பயன் படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட மற்றுமொரு பைல் வடிவமே PNG ஆகும். இவையும் எனிமேசன், ட்ரான்ஸ்பரன்சி மற்றும் இண்டர்லேஸ் என்பவற்றை ஆதரிக்கின்றன. PNG பைல்களும் PNG-8, PNG-24 என இரு வடிவங்களில் கிடைக்கின்றன. PNG-8 என்பது GIF பைகளை ஒத்தது. PNG-24 வானது JPEG பைல்களை ஒத்தது. எனினும் JPEG ஐ விடவும் அதிக பைல் அளவை இவை கொண்டிருக்கும்.

TIFF - Tagged Image File Format
டிஜிட்டல் கேமரா போட்டோவுக்கு மிகவும் பொருத்தமான ஒரு பைல் வடிவமே TIFF ஏனெனில் இதன் தரம் JPEG பைல்களை விடவும் உயர்ந்ததாயிருக்கும். எனினும் இந்த வகை பைல்களை அனேக எப்லிகேசன்கள் கம்ப்ரெஸ் செய்வதில்லை. அதனால் இந்த பைல்கள் அதிக பைல் அளவைக் கொண்டிருக்கும். ஹாட் டிஸ்கில் இந்த பைல்கள சேமிப்பதில் பிரச்சினை எழாது. பைல் அளவு பெரிதாக இருப்பதால் கேமராவில் பயன் படுத்தப்படும் மெமரி சிப்பில் அதிக அளவில் படங்களை சேமிக்க முடியாது போகும். எனவே பைல் அளவைக் கருதும்போது டிஜிட்டல் கேமராவிற்கு JPEG பைகளே பொருத்தமாகும். இவையும் எனிமேசன், ட்ரான்ஸ்பரன்சி மற்றும் இண்டர்லேஸ் என்பவற்றை ஆதரிக்காது
.
BMP - Bit-Map
இது மைரோஸொப்ட் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட இழப்புகளற்ற ஒரு இமேஜ் பைல் போமட்டாகும். இவை மிக அரிதாகாவே கம்ப்ரெஸ் செய்யப்படுகின்றன. என்வே இதன் பைல் அளவு பெரிதாகாவே இருக்கும். இதன் மூலம் 16.7 மில்லியன் வண்ண வேறுபாடுகளை உருவாக்க முடியும். இவையும் எனிமேசன், ட்ரான்ஸ்பரன்சி மற்றும் இண்டர்லேஸ் என்பவற்றை ஆதரிக்காது

PSD 
பலராலும் பயன்படுத்தப்படும் போட்டொ எடிட்டிங் மென்பொருளான அடோபி நிறுவனத்தின் போட்டோசொப் PSD, வடிவிலேயே பைல்களைச் சேமிக்கின் றன. இந்த மென்பொருள் படங்களைப் பல லேயர்களைக் கொண்டு உருவாக்கு கின்றன. PSD போமட் லேயர் பற்றிய விவரங்களைக் கொண்டிருக்கும். வேறொரு பைல் போமட்டில் இதனை செமிக்கும் போது லேயர் விவரங்கள் இழக்கபடும். எனினும் இறுதியாக அந்த PSD பைல் JPEG அல்லது TIFF போமட்டிலேயே மாற்றப்படும்.


- அனூப் -

Hard Disk Drive - Some known and unknown facts


Hard Disk Drive தெரிந்ததும் தெரியாததும்

எல்லாக் கணினிகளின் உள்ளேயும் ஒரு ஹாட் டிஸ்க் ட்ரைவ் இருப்பதை நீங்கள் அறிவீர்கள். டேட்டாவை கணினியின் உள்ளே நிரந்தரமாகச் சேமிக்கக் கூடிய ஒரு சாதனமே ஹாட் டிஸ்க் ட்ரைவ். கணினி இயக்கத்திலிருக்கும் போதோ அல்லது ஓய்வாக இருக்கும் போதோ ஹாட் ட்ரைவில் பதியப்பட்டுள்ள டேட்டா எந்தவித இழப்புகளுமின்றிப் பாதுகாப்பாக இருக்கும். அதாவது மின்சக்தி இல்லாமலேயே ஹாட் ட்ரைவிலுள்ள டேட்டா பாதுகாக்கப்படுகிறது.

கணினியில் உள்ள மிக முக்கிய பாகங்களில் ஒன்றாக ஹாட் ட்ரைவ் கருதப்படுகிறது. எனெனில் இயங்கு தளம் (operating system) , எப்லிகேசன் மென்பொருள், மற்றும் டேட்டா என அனைத்தும் இந்த ஹாட் ட்ரைவிலேயே சேமிக்கப்படுகின்றன. ஹாட் ட்ரைவ் முறையாக செயற்பட மறுக்கும் போது இயங்கு தளத்தை நினைவகத்தில் ஏற்ற முடியாமல் போய் விடுகிறது. அதாவது கணினியை பூட் செய்ய முடியாது போகும்.

அவ்வாறான சந்தர்ப்பங்களில் கணினி ஒரு பிழைச் செய்தியைக் காண்பித்த சந்தர்ப்பங்களை நீங்களும் எதிர் கொண்டிருக்கலாம்.

ஹாட் ட்ரைவ் பற்றிப் பேசும்போது ப்லேட்டர்ஸ், ‘ஆம்ஸ்’ மோட்டர் ட்ரேக்ஸ், செக்டர்ஸ் எனப் பல்வேறு வார்த்தைப் பிரயோகங்களை நீங்கள் கேட்டிருக்கலாம். ப்லேட்டர்ஸ் (platters) எனப்படுவது காந்தப் புலம் கொண்ட வட்ட வடிவிலான தட்டுகளைக் குறிக்கிறது. ஒரு ஹாட் ட்ரைவ் பல ப்லேட்டர்களைக் கொண்டிருக்கும். ஒவ்வொரு ப்லேட்டரும் ஒரு குறிப்பிட்ட அளவு டேட்டாவைச் சேமிக்கின்றன. எனவே அதிக கொள்ளளவு கொண்ட ஒரு ஹாட் ட்ரைவ் குறைந்த கொள்ளளவு கொண்ட ஹாட் ட்ரைவை விடவும் அதிக எண்ணிக்கையிலான ப்லேட்டர்களைக் கொண்டிருக்கும்.

ஹாட் ட்ரைவின் கொள்ளவு பைட்டில் அளவிடப்படுகிறது. தற்போது ஒரு டெறா பைட் (1 TB = 1024 GB) அளவிலான ஹாட் டிஸ்க் ட்ரைவ்களும் வெளிவர ஆரம்பித்துள்ளன.

ஒவ்வொரு ப்லேட்டரும் ஒரே மத்தியைக் கொண்ட பல வட்டப் பாதைகளாகப் பிரிக்கப்பட்டிருக்கும். இதனையே ட்ரேக்ஸ் (Tracks) எனப்படுகிறது. இந்த ட்ரேக்ஸிலேயே டேட்டா பதியப்படுகின்றன. ட்ரேக்ஸ் ஆனது செக்டர்ஸ் (sectors) என மேலும் சிறு பகுதிகளாகப் பிரிக்கப்படும்.

ப்லேட்டரிலிருந்து வெளியே தள்ளிக் கொண்டிருக்கும் கை போன்ற அமைப்பை ‘ஆம்’ (arm) எனப்படுகிறது.

காந்தப் புலம் கொண்டு தகவல்களைப் ப்லேட்டரில் (read) படிப்பதற்கும் பதிவதற்குமான (write) ரீட் ரைட் ஹெட்டை (read/write head) இந்த ‘ஆம்’ கொண்டுள்ளது.

ஒவ்வொரு ப்லேட்டரும் அதற்குரிய ஆமைக் கொண்டிருக்கும். அதன் மூலம் டேட்டா ஹாட் டிஸ்கில் பதியப்படும்.

ப்லேட்டர்களை சுழற்றுவதற்கான மோட்டார் (Motor) ஒன்றையும் ஹாட் ட்ரைவ் கொண்டுள்ளது. இந்த மோட்டார் ஒரு நிமிடத்தில் 4500 லிருந்து 15000 வரையிலான சுழற்சிகளை உருவாக்கக் கூடியவை. மோட்டரின் வேகம் RPM இல் (Rotations Per Minute) அளவிடப்படுகிறது. சுழற்சிகளின் எண்ணிக்கை அதிகமாயிருக்கும் போது ஹாட் ட்ரைவிலிருந்து விரைவாக டேட்டாவை அணுகலாம்.

ஹாட் ட்ரைவிலிருந்து டேட்டாவைப் படிக்கும் போது அல்லது மீளப் பெறும் போது, மோட்டரானது ப்லேட்டர்களைச் வேகமாகச் சுழற்றும். அதே வேளை அதிலுள்ள ‘ஆம்’ எனப்படும் பகுதி டேட்டா பதியப்பட்டுள்ள உரிய பகுதியை நோக்கி தானாக அசையும். ஆமிலுள்ள ஹெட் ஆனது காந்தப் புலம் கொண்ட பிட்டுகளை இனம் கண்டு கணினியால் கையாளக் கூடிய டேட்டாவாக மாற்றிக் கொடுக்கிறது. 


அதே போன்று டேட்டாவைப் பதியும் போது ஆமிலுள்ள ஹெட்டிலிருந்து காந்தப் புலத் துடிப்புகளை அனுப்பி ப்லேட்டரில் காந்தப் புல பண்புகளை மாற்றியமைக்கும். அதன் மூலம் ஹாட் ட்ரைவில் டேட்¡ பதியப்படும்.

ஹாட் டிஸ்கிலிருந்து ஒரு தகவலைப் பெறுவதற்கு எடுத்துக் கொள்ளும் நேரத்தை லேடன்சி (latency) எனப்படுகிறது. அதிக வேகம் கொண்ட ஹாட் ட்ரைவ், குறைந்த லேடன்சியைக் கொண்டிருக்கும். அதாவது 7200 rpm கொண்ட ஹாட் டிஸ்க் ட்ரைவ் 4.2 ms (மில்லி செகண்ட்) லேடன்சியைக் கொண்டிருக்கும்.

ப்லேட்டர் சுழலும் வேகம் தவிர ப்லேட்டரிலுள்ள ரீட் ரைட் ஹெட்டை உரிய டேட்¡வை நோக்கி நகர்த்த எடுக்கும் நேரமும் ஹாட் ட்ரைவிலிருந்து டேட்டாவைப் படிப்பதில் பாதிப்பைச் செலுத்தும் காரணியாக உள்ளது. இதனை சீக் டைம் (Seek Time) என்படுகிறது. இந்த நேர அளவு குறைவாக இருத்தல் அவசியம்.

ஹாட் ட்ரைவைக் கணினியில் பொருத்துவதற்கென சில இடை முகப்புகள் Interface உள்ளன. ஹாட் ட்ரைவிலுள்ள இந்த இடை முகப்பு மதர் போர்டுடன் பொருந்த வேண்டும். தற்போது ஹாட் ட்ரைவை மதர் போர்டுடன் பொருத்துவதற்கு IDE, SATA, SCSI என மூன்று வகையான இடை முகப்புகள் பாவனையிலுள்ளன.

பொதுவாகப் பாவனையிலுள்ள யிளிரி IDE (Integrated Drive Electronics) or ATA Advanced Technology Attachment) எனும் இடை முகப்பாகும். இதன் மூலம் 100 Mbps வரையிலான வேகத்தில் டேட்டாவைக் கடத்தலாம். எனினும் தற்போது இந்த இடை முகப்பு பாவனையிலிருந்து குறைந்து வருகிறது.

IDE இடை முகப்பிலிருந்து மாறி தற்போது ஹாட் ட்ரைவ்கள் ஷிதிஹிதி (Serial Advanced Technology Attachment )எனும் இடை முகப்புடன் வருகின்றன. இவை 100 முதல் 300 Mbps வரை வேகத்தில் டேட்டாவைக் கடத்த வல்லன.

தற்போது எல்லா கணினி தயாரிப்பு நிறுவனங்களும் இந்த தொழில் நுட்பத்தையே பயன்படுத்த ஆரம்பித்துள்ளன. SCSI (Small Computer System Interface) ஸ்கசி எனப்படும் இடை முகப்பு அநேகமாக சேர்வர் கணினிகளில் பயன்படுத்தப்படுகிறது. ஸ்கசி ஹாட் ட்ரைவ்கள் அதிக RPM வேகத்தைக் கொண்டவை.

ஹாட் டிஸ்க் ட்ரைவ் பற்றி முக்கியமாக நீங்கள் அறிந்திருக்க வேண்டியது யாதெனில், எப்போதோ ஒரு நாள் அது முறையாக இயங்காமல் பழுதடைந்து உங்கள் காலை வாரி விடப்போகிறது என்பதுதான்.

எனவே இது போன்ற சந்தர்ப்பங்களுக்கு நீங்கள் முகம் கொடுக்கத் தயாராக இருத்தல் வேண்டும். அதனால் உங்கள் முக்கியமான பைல்களை சீடி, டீவிடி போன்ற வேறொரு ஊடகத்தில் பாதுகாப்பாக பேக்கப் (back up) செய்து வைத்திருத்தல் அவசியம்.

அனூப்