Sunday, June 27, 2010

Screen Saver using MS Power Point


பவபொயிண்ட்டில் ஒரு ஸ்க்ரீன் சேவர்


எம்.எஸ். பவபொயிண்ட்டில் உருவாக்கிய ப்ரசன்டேசன் ஒன்றை டெஸ்க்டொப்பை அலங்கரிக்கும் ஒரு ஸ்க்ரீன் சேவராக இயங்க வைக்கலாமா என என் மாணவன் ஒருவன் என்னிடம் கேட்டான். நானும் உடனே “பவபொயிண்டில் நேரடியாக ஸ்க்ரீன் சேவராக் மாற்றும் வசதி கிடையாது. ஆனால் அதற்கென மூன்றாம் தரப்பு நிறுவனங்களின் ஏராளமான மென்பொருள் கருவிகள் இணையத்தில் கிடைக்கின்றன. அவற்றைக் கணினியில் நிறுவிக் கொள்வதன் மூலம் ப்ரசண்டேசன் ஒன்றை ஸ்க்ரீன் சேவராக மட்டுமல்லாது ஒரு வீடியோ பைலாக, மற்றும் ப்லேஸ் (Flash) பைலாகவும் கூட மாற்றிக் கொள்ளலாம் என்றேன்.


நான் சொன்னது சரியான பதில்தான் என்றாலும் எனக்குத் திருப்தி தரவில்லை. அதனால் பவபோயிண்ட் ப்ரசண்டேச்ன் ஒன்றை புதிதாக எந்த வொரு மென்பொருளும் நிறுவாது எவ்வாறு ஒரு ஸ்க்ரீன் சேவராக மாற்றலாம் என முயற்சித்துப் பார்த்ததில் எனக்கொரு வழி தோன்றியது. (இதொன்றும் பெரிய கண்டு பிடிப்பல்ல) அதனை உங்களுடனும் பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கிறேன்.


முதலில் பவபொயின்டைத் திற்ந்து ஒரு ப்ரசண்டேசனை உருவாக்கிக் கொள்ளுங்கள். பின்னர் அதனைக் சேமிப்பதற்கு பைல் மெனுவில் Save As தெரிவு செய்யுங்கள். அப்போது தோன்றும் Save As டயலொக் பொக்ஸில் அதனை சேமிப்பதற்கான ஒரு போல்டரைத் தெரிவு செய்து விட்டு Save as type எனுமிடத்தில் Device Independent Bitmap (*.bmp) என்பதைத் தெரிவு செய்து Save பட்டனில் க்ளிக் செய்யுங்கள். அப்போது தோன்றும் சிறிய மெஸ்ஸேஜ் பொக்ஸில் Every Slide அல்லது Current Slide Only என்பதைத் உங்கள் விருப்பப்படி தெரிவு செய்து ஓகே செய்யுங்கள். அப்போது ஒவ்வொரு ஸ்லைடும் பிட்மெப் (Bitmap) படங்களாக அந்த போல்டரினுள் சேமிக்கப்படும்.


அடுத்து பவபொயின்டை மூடி விட்டு டெஸ்க் டொப்பில் ரைட் க்ளிக் செய்து வரும் மெனுவில் Properties தெரிவு செய்து வழமையாக ஸ்க்ரீன் சேவர் செட்டிங் செய்யும் Display Properties டயலொக் பொக்ஸைத் திறந்து கொள்ளுங்கள்,

டிஸ்ப்லே ப்ரொப்படீஸ் டயலொக் பொக்ஸில் Screen saver டேபின் கீழ் My Pictures Slideshow தெரிவு செய்து அதன் அருகேயுள்ள Settings பட்டனில் க்ளிக் செய்யுங்கள்.

அப்போது தோன்றும் My Pictures Screen Saver Options எனும் சிறிய விண்டோவில் How often should pictures change? எனுமிடத்தில் எந்நேர இடை வெளிகளில் படங்கள் மாற வேண்டும் எனவும் How big should pictures be? எனுமிடத்தில் படத்தின் அளவு எவ்வாறிருக்க வேண்டும் என்பதனையும் உங்கள் விருப்பம் போல் தெரிவு செய்து விட்டு Use pictures in this folder எனுமிடத்தில் க்ளிக் செய்து நீங்கள் ஏற்கனவே ப்ரசன்டேசனை சேமித்த அந்த போல்டர் அமைந்திருக்கும் இடத்தையும் காட்டி விட்டு Preview பட்டனில் க்ளிக் செய்யுங்கள் உங்கள் ப்ரசண்டேசனை ஒரு அழகிய ஸ்க்ரீன் சேவராக திரையில் காணலாம். ஆனால் ப்ரசண்டேசனில் நீங்கள் வழங்கிய Animation Effects எதுவும் செயற்படாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

அனூப்

Open files and folders in a single click


பைல் போல்டர்களை ஒரே க்ளிக்கில் திறப்பதற்கு...

விண்டோஸ் கணினியில் பைல் போல்டர்களை டபல் க்ளிக் செய்தே அனைவரும் திறந்து கொள்கிறோம். ஆனால் ஒரு க்ளிக் செய்வதன் மூலம் எந்த அரு ஐகனையும் திறந்து கொள்ளலாம். அதற்குப் பின்வரும் வழிமுறையக் கையாளுங்கள்


. விண்டோஸ் எக்ஸ்பி / விஸ்டா மற்றும் விண்டோஸ் 7 இயங்கு தளங்களில் போல்டர் ஒன்றைத் திறந்து கொள்ளுங்கள். தோன்றும் விண்டோவில் டூல்ஸ் மெனுவில் Folder Options தெரிவு செய்யுங்கள். (அல்லது கண்ட்ரோல் பேனலில் போல்டர் ஒப்சன்ஸ் ) அப்போது வரும் டயலொக் பொக்ஸில் General டேபின் கீழ் Single-click to open an item (point to select) என்பதைத் தெரிவு செய்து ஓகே சொல்லுங்கள்.

How to replace fonts in Power point?


பவர்பொயிண்டில் ஒரே தடவையில் பொண்டை மாற்றிட..

பவர்பொயிண்ட் ப்ரசண்டேசன் ஒன்றில் நீங்கள் பயன் படுத்திய எழுத்துரு உங்களுக்குப் பிடிக்க வில்லையானால் ஒவ்வொரு ஸ்லைடாகத் தெரிவு செய்து அதனை மாற்ற வேண்டிய அவசியமில்லை.

ப்ரசண்டேசனில் உள்ள மொத்த ஸ்லைடுகளிலும் பொண்டை மாற்றுவதற்கு போமட் மெனுவுல் Replace Font தெரிவு செய்யுங்கள். அப்போது ஒரு சிறிய பெட்டி தோன்றும் Replace எனுமிடத்தில் தற்போது பயன் படுத்தியுள்ள எழுத்துருவின் பெயரைக் காட்டும். அதே போல் With எனுமிடத்தில் தேவையான பொன்டைத் தெரிவு செய்து ரிப்லேஸ் பட்டனில் க்ளிக் செய்ய ஒரே முறையில் எல்லா ஸ்லைடுகளிலும் பொண்ட் மாறி விடும்.

Sunday, June 20, 2010

What is 64 Bit Processor?


64 Bit Processor  என்றால் என்ன?


கணினியின் மூளையாகச் செயற்படுவது Central Processing Unit எனும் ப்ரோஸெஸரே. இந்த ப்ரோஸெஸ்ஸர் கணினிக்கு உள்ளீடு செய்யும் டேட்டாவைப் ஏதேனும் ஒரு செயற்பாட்டுக்குட்படுத்தி தகவலாக மாற்றுகிறது. இந்த செயற்பாட்டில் நினைவகமும் ப்ரோஸெஸ்ஸருக்குத் துனை நிற்கிறது.

ப்ரோஸெஸ்ஸர் (Processor) பற்றி பேசும் போது 32 பிட், 64 பிட் போன்ற வார்ததைகளை நீங்கள் கேட்டிருக்கலாம். இவை எதனைக் குறித்து நிற்கின்றன?

பிட் (bit) என்பது binary digit. என்பதன் சுருக்கம். அடிப்படையில் இந்த பிட் ஆனது கணினி எவ்வாறு டேட்டாவை தேக்கி வைக்கிறது என்பதைக் குறிக்கிறது. ஒரு பிட் என்பது 0 அ;ல்லது 1 எனும் பெருமானங்களை எடுக்கலாம். 0 மற்றும் 1 களால் ஆன எழுமாறான ஒரு சேர்மானத்தை (100100100111) பைனரி கோட் எனப்படுகிறது .


இந்த பிட்ஸ் கொண்டே ப்ரோஸெஸ்ஸரும் கணித்தல் செயற்பாடுகளை செய்கிறது. 32 பிட்டுகளைப் பயன் படுத்தும் ப்ரோஸெஸ்ஸர் 0 லிருந்து 4,294,967,295 வரையிலான வெவ்வேறு பிட் சேர்மானங்களை உருவாக்கலாம். அவ்வாறே 64 பிட் பயன் படுத்தும் போது 0 லிருந்து 18,446,744,073,709,551,615 வரையிலான வெவ்வேறு சேர்மானங்களை உருவாக்க முடியும், ஆகவே 64 பிட் கணினி மூலம் அதிக எண்னிக்கையிலான டேட்டாவைக் கையாள முடியும். என்பது வெளிப்படை.

மேலும் கணினியில் நீங்கள் என்றுமே கண்டு கொள்ளாத கவலைப் படாத பல ‘விடயங்கள்’ உள்ளன., அவற்றுள் டேட்டா பஸ் எனப்படும் ஒரு விடயமும் உள்ளது, இந்த டேட்டா பஸ்ஸானது எந்த நகரங்களுக்கிடையிலும் ஓடுவதில்லை. எனினும் இது டேட்டாவை கணினியின் ஒவ்வொரு பகுதிக்கும் எடுத்துச் செல்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

அடிப்படையில் இந்த டேட்டா பஸ்ஸானது, நினைவகத்தை கணினியின் மூளையாகச் செயற்படும் ப்ரோஸெஸ்ஸர் உட்பட வெவ்வேறு பாகங்களுடன் இணைக்கிறது, பழைய தொழில் நுட்பமான ஒரு 32 பிட் கணினியில் டேட்டா பஸ்ஸின் அளவானது 32 பிட் அளவு கொண்டதாயிருக்கும். ஆனால் இந்த புதிய தொழில் நுட்பமான 64 பிட் கணினியில் இதன் அளவு இரண்டு மடங்காக அதிகரிக்கிறது,. இதனால் ஒரே நேரத்தில் அதிக டேட்டாவை ப்ரோஸெஸ் செய்யும் போது கணினி அதிக வேகம் கொண்டதாயிருக்கும். எனினும் இது குறிப்பிட்ட சில அப்லிகேகேசன்களுக்கே பொருந்தும்,

பெரிய அளவிலான கணித்தற் செயற் பாடுகள் நடை பெறக் கூடிய தரவுத் தளங்களை அணுகக் கூடிய, மற்றும் சிக்கலான பிரச்சினைகளைக்குத் தீர்வு காணக்கூடிய. பெரிய வணிக நிறுவனங்கள், வங்கிகள், பல்கலைக் கழகங்களில் 64 பிட் ப்ரோஸெஸ்ஸர்கள் மிகுந்த பயனளிக்கும்.

மேற் சொன்ன தேவைகள் இல்லாத ஒபிஸ் எப்லிகேசன் மற்றும் இணைய பயன் பாட்டோடு திருப்தியுறும் சாதாரண கணினிப் பயனர்களுக்கு இந்த 64 பிட் ப்ரோஸெஸ்ஸர் பெரியளவிலான பயனைத் தரப் போவதில்லை எனினும் கிரபிக் மற்றும் மல்டி மீடியா பயன் பாட்டில் பயன் தரலாம். .32 பிட் ப்ரோஸெஸ்ஸரின் கட்டமைப்பை விட பல வகையில் மேம்பட்டதாக 64 பிட் ப்ரோஸெஸ்ஸர்கள் உருவாக்கப்படுகின்றன. 32 பிட் ப்ரோஸெஸ்ஸரை விட 64 பிட் ப்ரோஸெஸ்ஸர் அதிக செயற் திறன வாய்ந்ததால். வேகமாக டேட்டாவைப் ப்ரோஸெஸ் செய்து விடும். எனினும் 64 பிட் ப்ரோஸெஸ்ஸர்களின் முழுமையான பயனைப் பெற 64 பிட் ப்ரோஸெஸ்ஸர் ஆதரிக்கக் கூடிய மென்பொருள்களை கனினியில் நிறுவிக் கொள்ள வேண்டும்.. இயங்கு தளங்களும் எப்லிகேசன் மென்பொருள்களும் 64 பிட் ப்ரோஸெஸ்ஸர்களுக்கேற்றவாறு உருவாக்கப்படாத விடத்து சிறிதளவான பயனே கிடைக்கிறது. உதாரணமாக 64 பிட் விண்டோஸ் விஸ்டா இயங்குதளம் 32 பிட் மென்பொருள்களை ஆதரிப்பதில்லை


ஒரு 64 பிட் இயங்குதளமனது (Operating System) என்பது 64 பிட் ப்ரோஸெச்சருக்கென உருவாக்கப்பட்டிருக்கும் இயங்கு தளமாகும். விண்டோஸ் எக்ஸ்பீ,  விஸ்டா மற்றும் விண்டோஸ் 7 பதிப்புகள் 32 பிட் , 64 பிட் இயங்கு தளங்களுக்கென வேறு வேறாக உருவாக்கப்படுள்ளன.

64 பிட் மென் பொருள்களை 32 பிட் ப்ரோஸெஸ்ஸர் கொண்ட கணினிகளில் இயக்க முடியாது,. எனினும் 32 பிட் மென்பொருள்களை 64 பிட் கொண்ட ப்ரோஸெஸ்ஸர் கொண்ட கணினிகளில் இயக்கலாம்.. AMD நிறுவனத்தின் 64 பிட் ப்ர்ரொஸெஸ்ஸர்கள் 32 மற்றும் 64 பிட் இயங்கு தளங்களை ஆதரிக்கின்றன.

அத்தோடு ப்ரிண்டர் . ஸ்கேனர், டிஜிட்டல் கேமரா என கணினியில் பொருத்தும் அனைத்து வன்பொருள் சாதனங்களுக்கும் 64 பிட் கொண்ட ட்ரைவர் மென்பொருள்களையே நிறுவ வேண்டியிருக்கும். இது 64 பிட் ப்ரோஸெஸ்ஸர் பயன் படுத்துவதிலுள்ள பாதக நிலையாகும். எனினும் இந்த நிலைமை தற்காலிகமானதே. எதிர்காலத்தில் ட்ரைவர் மென்பொருள்களும் 64 பிட்டிலேயே கிடைக்கக் கூடியதாயிருக்கும்.

அதே வேளை 64 பிட் ப்ரோஸெஸ்ஸர் அதிக நினைவகத்தையும் ஆதரிக்கக் கூடியது என்பதால் நினைவகத்தின் அளவையும் அதிகரித்துக் கொள்ள வேண்டும். அதன் மூலம் கணினியின் செயற் திறன் மேலும் அதிகரிக்கும். 64 பிட்டின் உச்ச பயனைப் பெற 4 ஜீபி அளவிலான நினைவகமும் அவசியமாகும்.

உங்கள் கணினி 32 பிட் ப்ரோஸெஸ்ஸரா அல்லது 64 பிட் ப்ரோஸெஸ்ஸரா என்பதை எவ்வாறு அறிந்து கொள்வது?

விண்டோஸ் எக்ஸ்பீயில் Start à All Programs à Accessories àSystem tools. ஊடாக System Information தெரிவு செய்யுங்கள். அப்போது தோன்றும் சிறிய விண்டோவில் Processor எனுமிடத்தில் x86 என இருப்பின் அது 32 பிட் ப்ரோஸெஸ்ஸர் என உறுதி செய்து கொள்ளலாம்.. ia64 or AMD64 என இருப்பின் அது 64 பிட் ப்ரோஸெஸ்ஸர் ஆகும். அதேபோல் OS Name எனுமிடத்தில் Microsoft Windows XP Professional x64 Edition என இருப்பின் அது 64 பிட் ப்ரொஸெஸ்ஸரை ஆதரிக்கும் இயங்குதளம் என தெரிந்து கொள்ளுங்கள்

மென்பொருள் தயாரிப்பு நிறுவனக்கள் இன்னும் 32 பிட்டிலிருந்து 64 பிட்டுக்கு முழுமையாக் மாறி விடாததால் 64 பிட் ப்ரோஸெஸ்ஸர்களின் முழுமையான பயனைப் பெற இன்னும் சிறிது காலம் செல்லலாம். எனினும் எதிர் காலத்தில் 32 பிட் மற்றும் 64 பிட் ப்ரோஸெஸ்ஸர்களுக்கிடையேயான போட்டியில் சந்தேகத்திற்கிடமின்றி 64 பிட் ப்ரோஸெஸ்ஸரே வெற்றி பெறப் போவது. உறுதி

-அனூப்-